திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.66 திருவேட்டக்குடி
பண் - பஞ்சமம்
வண்டிரைக்கும் மலர்க்கொன்றை விரிசடைமேல் வரியரவங்
கண்டிரைக்கும் பிறைச்சென்னிக் காபாலி கனைகழல்கள்
தொண்டிரைத்துத் தொழுதிறைஞ்சத் துளங்கொளிநீர்ச் சுடர்ப்பவளந்
தெண்டிரைக்கள் கொணர்ந்தெறியுந் திருவேட்டக் குடியாரே.
1
பாய்திமிலர் வலையோடு மீன்வாரிப் பயின்றெங்குங்
காசினியிற் கொணர்ந்தட்டுங் கைதல்சூழ் கழிக்கானல்
போயிரவிற் பேயோடும் புறங்காட்டிற் புரிந்தழகார்
தீயெரிகை மகிழ்ந்தாருந் திருவேட்டக் குடியாரே.
2
தோத்திரமா மணலிலிங்கந் தொடங்கியஆன் நிரையிற்பால்
பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்தருளி
ஆத்தமென மறைநால்வர்க் கறம்புரிநூ லன்றுரைத்த
தீர்த்தமல்கு சடையாருந் திருவேட்டக் குடியாரே.
3
கலவஞ்சேர் கழிக்கானல் கதிர்முத்தங் கலந்தெங்கும்
அலவஞ்சேர் அணைவாரிக் கொணர்ந்தெறியும் அகன்றுறைவாய்
நிவலஞ்சேர் நுண்ணிடைய நேரிழையா ளவளோடுந்
திலகஞ்சேர் நெற்றியினார் திருவேட்டக் குடியாரே.
4
பங்கமார் கடலலறப் பருவரையோ டரவுழலச்
செங்கண்மால் கடையஎழு நஞ்சருந்துஞ் சிவமூர்த்தி
அங்கம்நான் மறைநால்வர்க் கறம்பொருளின் பயனளித்த
திங்கள்சேர் சடையாருந் திருவேட்டக் குடியாரே.
5
நாவாய பிறைச்சென்னி நலந்திகழு மிலங்கிப்பி
கோவாத நித்திலங்கள் கொணர்ந்தெறியுங் குளிர்கானல்
ஏவாரும் வெஞ்சிலையால் எயின்மூன்றும் எரிசெய்த
தேவாதி தேவனார் திருவேட்டக் குடியாரே.
6
பானிலவும் பங்கயத்துப் பைங்கானல் வெண்குருகு
கானிலவு மலர்ப்பொய்கைக் கைதல்சூழ் கழிக்கானல்
மானின்விழி மலைமகளோ டொருபாகம் பிரிவரியார்
தேனிலவு மலர்ச்சோலைத் திருவேட்டக் குடியாரே.
7
துறையுலவு கடலோதஞ் சுரிசங்க மிடறிப்போய்
நறையுலவும் பொழிற்புன்னை நன்னீழற் கீழமரும்
இறைபயிலும் இராவணன்றன் தலைபத்தும் இருபதுதோள்
திறலழிய அடர்த்தாருந் திருவேட்டக் குடியாரே.
8
அருமறைநான் முகத்தானும் அகலிடம்நீ ரேற்றானும்
இருவருமாய் அளப்பரிய எரியுருவாய் நீண்டபிரான்
வருபுனலின் மணியுந்தி மறிதிரையார் சுடர்ப்பவளத்
திருவுருவில் வெண்ணீற்றார் திருவேட்டக் குடியாரே.
9
இகழ்ந்துரைக்குஞ் சமணர்களும் இடும்போர்வைச் சாக்கியரும்
புகழ்ந்துரையாப் பாவிகள்சொற் கொள்ளேன்மின் பொருளென்ன
நிகழ்ந்திலங்கு வெண்மணலின் நிறைத்துண்டப் பிறைக்கற்றை
திகழ்ந்திலங்கு செஞ்சடையார் திருவேட்டக் குடியாரே.
10
தெண்டிரைசேர் வயலுடுத்த திருவேட்டக் குடியாரைத்
தண்டலைசூழ் கலிக்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்டமிழ்நூல் இவைபத்தும் உணர்ந்தேத்த வல்லார்போய்
உண்டுடுப்பில் வானவரோ டுயர்வானத் திருப்பாரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com